Sunday, December 31, 2006

உயிர் வாழ உதவி வேண்டி - 2

அன்பான நண்பர்களே,

சிரமம் பார்க்காமல் இந்தப் பதிவை வாசித்து விடும்படி ஒரு அன்பான வேண்டுகோளுடன்,

இரு மாதங்களுக்கு முன் குழந்தை ஸ்வேதாவின் மருத்துவ உதவிக்காக சிங்கை நண்பர் அன்பு, என் வலைப்பதிவு வாயிலாக முன் வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, பல நண்பர்கள் பொருளுதவி செய்தனர். கிட்டத்தட்ட 40000 ரூபாயை சேகரித்து, மருத்துவமனைக்கு அனுப்ப முடிந்தது.

பார்க்க: http://balaji_ammu.blogspot.com/2006/11/blog-post_04.html

ஸ்வேதாவுக்கு நல்ல விதமாக இதய அறுவை சிகிச்சையும் நடைபெற்று, தற்போது நலத்துடன் இருக்கிறாள்.

பார்க்க: http://balaji_ammu.blogspot.com/2006/12/blog-post_17.html

ஒரு வாரம் முன்பு, ஸ்வேதாவின் வீட்டுக்குச் சென்று அவளை பார்த்து விட்டு வந்தேன். சக வலைப்பதிவர்களான சங்கரையும், மதுமிதாவையும் உடன் அழைத்துச் சென்றிருந்தேன். எல்லாம் நல்லபடியாக முடிந்து குழந்தை நலம் பெற்றதில், அவள் பெற்றோருக்கு அளவில்லா மகிழ்ச்சியும், எங்களுக்கும் மிகுந்த மனநிறைவும் ! இனிமையான சந்திப்பும் கூட. ஸ்வேதா எங்களை டாக்டர்கள் என்று நினைத்து முதலில் மிரண்டு எங்கள் கிட்டேயே வர மறுத்தாள் ! பின், பயம் விலகி, சற்று சிரிக்கவும், கிளம்பும் சமயம் டாட்டாவும் காட்டினாள் :)

இரு வாரங்களுக்கு முன், நண்பர்கள் ரஜினி ராம்கி மற்றும் சங்கர் மூலமாக இன்னொரு பிஞ்சுக் குழந்தைக்கு (லோகப்பிரியா) மருத்துவ உதவி தேவைப்படுவதாக செய்தி வந்தது. ராம்கி தனது ரஜினி ரசிகர்கள் சங்கம் மூலம் 12000 ரூபாய் கலெக்ட் செய்துள்ளதாகக் கூறினார். சங்கர், லோகப்பிரியாவின் தந்தையை சந்தித்து விவரங்களைக் கேட்டு எனக்கு அனுப்பிய மடலையும், ராம்கியின் மடலையும், உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். குழந்தைக்கு ஒரு மாதத்திற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

********************************
அன்புள்ள பாலாஜி

இதனுடன் குழந்தை லோகப்ரியாவின்(5 Month's old) மருத்துவ உதவிக்காக இருதய நிபுணர் டாக்டர் . M.S.ரஞ்சித் கொடுத்துள்ள கடிதத்தை இணைத்துள்ளேன்.

குழந்தை இப்போது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ளது. அங்கு தேவையான உபகரணங்கள் இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையை ராமச்சந்திராவில் காட்டும் படி பரிந்துரைத்துள்ளனர்.
இம் குழந்தையின் தந்தை போன வார இறுதியில் என்னை வந்து சந்தித்தார்.
குழந்தை லோகப்ரியாவின் தந்தை திரு.அருள் மீன்பாடி வண்டி எனப்படும் ட்ரை சைக்கிள் ஓட்டுகிறார்.தாயார் ஒரு வீட்டில் வீடு பெறுக்கும் வேலை செய்கிறார்.இப்போது குழந்தையின் உடல்நிலை காரணமாக அதுவும் போக முடியவில்லை.

இவர்கள் வசிப்பது எனது வீட்டிற்கு அருகில் உள்ள குடிசைப் பகுதியில்
இவர்களது முதல் ஆண் குழந்தையும் 2 ஆண்டுகளுக்கு முன் இதே போல் இதய வியாதியால் இறந்து விட்டது..சரியான டையக்னாஸிஸ் மற்றும் சிகிச்சையின்றி...கொடுமை என்னவென்றால் என்ன வியாதி என்றே இவர்களிடம் சொல்லப் படவில்லை.ஹெரிடிடரி என்றும் விளக்கவில்லை...இது தெரியாத அறியாமையால் இரண்டாவது குழந்தையும் பெற்று அதுவும் அதே நோயால் அவதியுரும் நிலை எந்த பெற்றோருக்கும் வர வேண்டாம்அப்போதே சொல்லியிருந்தால் இரண்டாவதாக குழந்தை பெற்றே இருக்க மாட்டோம் என இப்போது கதறுகிறார்கள்.

அறியாமையால் உதவுவதற்கு யாருமின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை கஷ்டப்பட்டு ரூ.20,000/- சேகரித்துள்ளனர்( அவர்கள் குடிசைப் பகுதியில் உள்ள அனைத்து கூலி வேலை/வீட்டு வேலை செய்யும் மக்கள் 50, 100 என உதவி செய்து இந்த தொகையை கொடுத்துள்ளனர்
எங்கள் தெருவில் உள்ள தெலுங்கு டைரக்டர்,தயாரிப்பாளர் மாருதி ராவ் ரூ.10,000/- உதவி செய்துள்ளார்

ஆக மொத்தம் ரூ 30,000/- சேர்ந்துள்ளது...மேலும் 100000 தேவை இதில் பெரும் பகுதி சேர்ந்து விட்டால் கூட அறுவை சிகிச்சை செய்து தர டாக்டர் சம்மதித்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்காக ஜனவரி-27 என நாள் குறித்திருக்கிறது...இருந்தாலும் பணம் சேர்ந்து விட்டால் முன்னமே செய்து விடுவார்கள்.

அன்புடன்...ச.சங்கர்
*****************************

Here is one Medical Request. Baby. Loga Priya aged 3 months, admitted in Shri Ramachandra Hospital, Porur, suffering from Congenital Hear Disease and she has to undergo Open Heart SErgety which will cost around 1.25 lakhs and the same has to be done by January 2007. I've verified the same request and it's a genuine one, family is a lower middle class and father is a technician.

Name of the Patient : Baby. Loga Priya
Ref. No. 0951431
Consultant : Dr. M.S. Ranjit,
Professor Paediatric Cardilology,
Sri Ramachandra Hospital.
Contact No. 24768403 Ext. 450 & 464
E-Mail : ranjitmadathil@yahoo.com

* Any amount can be made but it should reach on or before 27.1.2007

Thanks & Regards,
Ramki
************************

தங்களால் இயன்ற உதவியை, அது எவ்வளவு சிறியதாக இருப்பினும், செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறேன். உதவி செய்வதற்கு, கீழ்க்கண்ட மின் மடல் முகவரிகளில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

rajni_ramki@yahoo.com
sankar.saptharishi@gmail.com
balaji_ammu@yahoo.com

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 275 ***

Monday, December 18, 2006

வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணி !

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்தியா சற்று நேரம் முன்பு, வெற்றி பெற்று வரலாறு படைத்தது !!! தென்னாபிரிக்காவில் நடந்த டெஸ்ட போட்டிகளில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி இது ! இதற்கு முன் நடைபெற்ற ஒரு நாள் பந்தயங்களில் இந்திய அணி சந்தித்த மோசமான தோல்விகளை வைத்துப் பார்க்கும்போது, இவ்வெற்றி ஒரு மகத்தான வெற்றி என்று நிச்சயம் கூற முடியும். அதுவும் ஓர் அணியாக விளையாடி, இந்த உன்னத வெற்றிக்கு அணி வீரர்கள் பலரும் பங்களித்தனர் என்றால் அது மிகையில்லை.

இன்று சற்று உடல் நலக் குறைவால் அலுவலகம் செல்ல முடியாமல் போனது கூட நல்லது தான் :) டிவியில் இந்திய வெற்றியையும், இந்திய அணியினரின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் பார்த்து ரசிக்க முடிந்ததில் மகிழ்ச்சியே ! எப்போதாவது தானே இது போன்ற தருணங்கள் காணக் கிடைக்கிறது ;-)

இந்த வெற்றிக்கு அணி வீரர்கள் பலரும் காரணமாய் இருந்தனர். இந்தியாவின் முதல் இன்னிங்க்ஸில் சச்சின் 44 ரன்களும், கங்குலி 51 ரன்களும் எடுத்து, இந்தியா 249 ரன்கள் சேர்க்க உதவினர். VRV சிங்கும் இன்னிங்க்ஸின் இறுதியில் கங்குலிக்கு துணையாக நின்று 29 ரன்கள் எடுத்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும் !!!

தென்னாபிரிக்க அணி பேட் செய்தபோது, ஓர் இளஞ்சிங்கத்தை போல் பந்து வீசிய ஸ்ரீசாந்த் 5 விக்கெட்டுகளையும், அனுபவமிக்க ஜாகீரும், அனில் கும்ப்ளேயும் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி தென்னாபிரிக்க அணியை 84 ரன்களுக்கு சுருட்டினார்கள் ! சேவாக் மற்றும் லஷ்மண் ஆகியோர் தலா இரண்டு அருமையான காட்ச்களைப் பிடித்தனர்.

இந்தியாவின் 2-வது இன்னிங்க்ஸில் சேவாக் அதிரடியாக ஆடி 33 ரன்களும், கங்குலி 25 ரன்களும், லஷ்மண் நிதானமாக ஆடி 73 ரன்களும் எடுத்தனர். இன்னிங்க்ஸின் இறுதியில் ஜாகீர், லஷ்மணுக்குத் துணையாக நின்று ஆடி, 37 ரன்கள் எடுத்தது ஆட்டத்தின் சிறப்பு அம்சம் ! இந்தியா 236 ரன்கள் எடுத்து, தென்னாபிரிக்காவுக்கு 402 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

தென்னாபிரிக்கா, இரண்டாவது இன்னிங்க்ஸில் 278 ரன்கள் மட்டுமே எடுத்து, 123 ரன்கள் வித்தியாசத்தில், நான்காவது நாள் உணவு இடைவேளை முன்பாகவே தோல்வியைத் தழுவியது ! ஸ்ரீசாந்த், ஜாகீர், கும்ப்ளே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அனில் கும்ப்ளே, போலக்கும், பிரின்ஸ¤ம் கூட்டு சேர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நேரத்தில், அவ்விருவரையும், clean bowled செய்து தான் ஒரு மாஸ்டர் பந்து வீச்சாளர் என்பதை மறுபடி ஒரு முறை நிரூபித்தார் !! பிரின்ஸ் 97 ரன்கள் எடுத்து, சதத்தை நழுவ விட்டார். 2-வது இன்னிங்க்ஸிலும், சேவாக் இரண்டு நல்ல காட்ச்கள் பிடித்தார்.

இந்த அற்புதமான இந்திய வெற்றிக்கு, இளமையும், அனுபவமும் ஒரு சேர நின்று வழி வகுத்தன என்று சந்தோஷமாகக் கூறலாம் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 271 ***

Sunday, December 17, 2006

குழந்தை ஸ்வேதா நலம்

அன்புக்குரிய நண்பர் சிங்கை அன்பு அவர்கள் குழந்தை ஸ்வேதாவின் மருத்துவ உதவிக்கான முயற்சியை, எனது பதிவில் வெளியிட்ட ஒரு வேண்டுகோள் வாயிலாகத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக வலையுலக நண்பர்கள், தகவல்கள் அளித்தும், பொருளுதவி செய்தும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

ஸ்வேதாவின் இதய அறுவை சிகிச்சை ஒரு வாரம் முன்பு நல்லபடி நடந்து முடிந்தது. ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்த ஸ்வேதா, தற்போது வீட்டுக்கு வந்து விட்டாள். அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் அவ்வப்போது சற்று வலியிருந்தாலும், குழந்தை ஸ்வேதா நலமாகவே இருக்கிறாள். ஒரிரு மாதத்தில் பூரண குணம் அடைந்து விடுவார் என்று டாக்டர் கூறியுள்ளார்.

நேற்று மருத்துவமனை சென்று குழந்தையைப் பார்க்கலாம் என்று எண்ணியிருந்தேன், அதற்குள் ஸ்வேதா டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டுக்குச் சென்று விட்டாள். எனது உடல் நலமும் சற்று சரியில்லாத நிலையில், ஒரு 2-3 நாட்கள் கழித்து, ஸ்வேதாவை அவளது வீட்டிற்கே சென்று பார்க்கலாம் என்றிருக்கிறேன். இந்த நேரத்தில், உதவிய நண்பர்களுக்கும், ஸ்வேதா குணமடைய வாழ்த்திய / பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 270 ***

Sunday, December 10, 2006

சாந்தி - வெள்ளி வென்ற தங்க மங்கை

தோஹாவில் நடைபெறும் ஆசியாத் விளையாட்டுக்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாந்தி சவுந்தராஜன் என்ற 24 வயது வீராங்கனை, 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று (2:03:16) வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் பதக்கப் பட்டியலில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ! மூன்றாவது இடத்தைப் பிடித்த கழகஸ்தானைச் சேர்ந்த விக்டோரியாவை 3/100 வினாடிகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளினார்.
Photobucket - Video and Image Hosting
அவரது ஓட்டத்தை டிவியில் பார்த்தேன், நிஜமாகவே கடைசி 100 மீட்டர் அபாரமாக, புயல் போல ஒடி, அனுபவமிக்க பலரை பின்னுக்குத் தள்ளி, இந்த சாதனையைப் புரிந்தார் !!! பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்த பெருவாரியான இந்தியர்கள் தன்னை உற்சாகப்படுத்தியது, பதக்கம் பெற வேண்டும் என்ற தனது உத்வேகத்தை அதிகப்படுத்தியது என்று சாந்தி கூறியிருக்கிறார். தனது பயிற்சியாளர் நாகராஜனையும் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு, சாந்தியின் இந்த மகத்தான சாதனையை பாராட்டி அவருக்கு 15 லட்ச ரூபாயை பரிசாக அறிவித்துள்ளது.

புதுக்கோட்டையில், ஓர் ஏழைக் குடும்பத்தில் (மொத்தம் ஏழு பேர்) பிறந்த சாந்தி, முதலில் ஓடத் தொடங்கியதே தனது குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்கத் தான். ஏனெனில், அவரது (கூலி வேலை பார்க்கும்) தாயாரின் சொற்ப வருமானத்தில் சாந்தியின் குடும்பம் வறுமையின் கொடுமையில் வாடியது. இதய நோயில் வாடும் அவரது தந்தை, வேலைக்குச் செல்ல முடியாத சூழல் !

சென்ற வருடம், பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு, மூன்றாவது இடம் பெற்றதில், சாந்திக்கு ரூ.25000 கிடைத்தது. அதைக் கொண்டு அவரது நான்கு தம்பி தங்கைகளின் கல்விச் செலவை சமாளித்தார். பின்னர், பெடரேஷன் கோப்பை 800 மீ ஓட்டத்தில், முதலிடம் வந்து தங்கம் வென்றார். அதன் பின்னர், செப்டம்பர் 2005-இல் நடந்த ஆசிய தடகளப் போட்டிகளில், 800 மீ ஓட்டத்தில், வெள்ளிப் பதக்கம் வென்றார். மிகுந்த குடும்ப கஷ்டங்களுக்கிடையில், அயரா முயற்சியோடு, படிப்படியாக முன்னுக்கு வந்த சாந்தியை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஒரு தடகள வீராங்கனைக்கு, சரியான சத்துணவு மிக அவசியமானது. ஆனால், அவரது குடும்பமே அவரை நம்பியிருக்கும் சூழலில், சாந்தி பல நேரங்களில் பட்டினி கிடந்திருக்கிறார். தற்போது மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் சாந்தி, தனது ஓட்டப்பந்தய வெற்றிகள் தனக்கு ஒரு நல்ல வேலையைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையோடு உள்ளார்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 269 ***

Friday, December 08, 2006

Warning ! Hazardous Material

இதைப் பிரசுரிப்பதால், பெண்ணியவாதிகள் என்னை கண்ணியமற்றவன் என்று எண்ண வேண்டாம் !!! Please take it in good humour and please do not come knocking at my door, with brick bats :))) வேண்டுமானால், இந்த 'data sheet'-ஐ எழுதியவரைக் கண்டுபிடித்து உங்கள் முன் ஆஜர்படுத்த ஆவன செய்கிறேன் !

Photobucket - Video and Image Hosting

எ.அ.பாலா

### 268 ###

Wednesday, December 06, 2006

சிந்திக்க மறுக்கும் சிந்தனாவியாதிகள்

கி.அ.அ. (கிராமத்து அரட்டை அரசியல்) அனானி ஒரு மேட்டரை மெயிலில் அனுப்பி, இவ்வாறு எழுதியிருந்தார்:
**************************
எ.அ.பாலா,
கொஞ்ச நாளா ஊர்ல இல்லை. வலைப்பதிவு பக்கமும் வர முடியவில்லை. இன்று வாசித்த ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இட (அட ...அனானியாத் தான்) எண்ணி எழுதியது நீண்டு விட்டதால், தங்களுக்கு அனுப்புகிறேன். பதிவாக இடுவீர்கள் என்று நம்புகிறேன். யோசித்துப் பார்த்தால் குறிப்பிட்ட அப்பதிவில் பின்னூட்டுவதை விட (ஜால்ரா காதைப் பிளப்பதால்) தாங்கள் பதிவாக பிரசுரித்தால் பெட்டர் என நினைக்கிறேன். அப்புறம் உங்கள் இஷ்டம்.
கி.அ.அ.அனானி

பி.கு: எந்தப் பதிவை குறிப்பிடுகிறேன் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு டிசம்பர் மாதக் கச்சேரிகளுக்கு பாலா இலவச டிக்கெட் வழங்குவார் ;-)

***************************
'இதில் என்ன இருக்கிறது' என்பதாலும், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த நோக்கிலும் கி.அ.அ.அனானியின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் :)
இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! கி.அ.அ.அ மேட்டர் பதிவாக கீழே !
எ.அ.பாலா
**********************

"எங்கள் வீட்டில் தேங்காய் குழம்பு" இப்படி சொன்னவளிடம் எதிர் வீட்டுக்காரி " எங்கள் வீட்டில்
யாருக்குமே தேங்காய் ஆகாது..நாங்கள் தேங்காயே வாங்குவதில்லை " சொல்லும் போதே மனதுக்குள்
தேங்காயை துறுவு துறுவென்று துறுவி தேங்காய் வாங்க வக்கில்லாத அகங்காரத்தை சேர்த்து மனதுக்குள் போட்டு மென்று அரைத்த படி கடவாயில் தேங்காய் நினைப்பின் எச்சில் ஊற சொல்வாளாம். அடுத்த
வீட்டுக்காரியின் பொறாமை பற்றி இந்த மாதிரியாக வர்ணித்திருப்பார் ஒரு எழுத்தாளர்...தமிழ்
கதையில்தான்...இப்படி இருக்கிறது ஒரு வலைப்பதிவரின் ஆதங்கம்....

விஷயம் ஒன்றுமில்லை....டிசம்பர் கச்சேரிகளில் தமிழில் பாடுவதில்லையாம்...பாடும் ஒரு
குறிப்பிட்ட சாதி பொண்கள்...!!!!????

இந்த மாதிரி அதிகம் (வெட்டி) உணர்ச்சி வசப்படுபவர்களுக்கு சில யோசனைகள்

முதலாவதாக இந்த சாதிக்காரர்கள் மட்டும் ஏன் பாட வேண்டும்...விருப்பமுள்ளவர் அனைவரும் தமிழில் பாடி தமிழ் வளர்க்கலாம்...

இரண்டாவதாக இப்படி தமிழல்லாத குறிப்பிட்ட மொழியில் பாடி ( தமிழ் வளர்க்காத ) கச்சேரிகளை புறக்கணிக்கலாம்

மூன்றாவதாக தமிழில் பாடுபவர்களை ஊக்குவிக்க ஏதாவது உபயோகமாக செய்யலாம்..

நாங்காவதாக எனக்கு பறை, தமுக்கு அடிக்கத் தெரியும் என்று பீற்றுவதை விட்டு விட்டு அரங்கேற்றம் செய்து தமிழ் பாரம்பரிய கலைகளை மக்களிடம் எடுத்து செல்லலாம்.

ஐந்தாவதாக தமிழில் மட்டுமே பாடி கச்சேரி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசை மானியம் வழங்கச் சொல்லி பரிந்துரையாவது செய்யலாம்.

இதெல்லாம் விட்டுவிட்டு எந்த ஒரு குறிப்பிட்ட சாதியினரையும் இழிவாக பேசி கூப்பாடு போடுவதாலெல்லாம் வலையுலகில் அரிப்பெடுத்து அலையும் சிலருக்கு சுகமாய் சொரிந்து விட உதவலாம்...ஆனால் இதனாலெல்லாம் தமிழ் வளர்ந்து விடாது...அரிப்பை சொரியும் போது சுகமாய் இருக்கும்...ஆனால் சொரிந்து சொரிந்து புண்ணாகுமே தவிர சொரிவது அரிப்புக்கு மருந்தாகுமா????

இவர்களே சொல்வது போல பட்டுப் புடவை சரசரக்க , போண்டா தின்பதற்காகவே ஒரு சில மாமிகள் மட்டுமே போய் புரியாமல் கேட்கும் சங்கீதத்தின் மேல் இவர்களுக்கு ஏன் இத்தனை ஆற்றாமை???அங்கலாய்ப்பு???? இப்படி சிலர் பாடுவதும் கேட்பதும் எந்தவிதத்தில் தமிழ் வளராமல் தடுத்துவிட்டது....இத்தனைக்கும் பாடுபவர்கள்... அனைவரும் வாரீர்...ஆதரவு தாரீர் என்றெல்லாம் இவர்களைப் போய் கேட்டதாகக் கூட தெரியவில்லை...அப்படிக் கேட்டாலும் தமிழில் பாடாதவர்களுக்கு ஆதரவில்லை என தெள்ளத்தெளிவாக சொல்லி விடலாம்.இதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் புத்தகங்களையும் புறக்கணித்து விடுங்கள்..அவர்களும் இதனால் சந்தாதாரர்கள் குறைந்தால் அதன் மூலம் பாடம் கற்று இந்த உதவாக்கரை கச்சேரிகளைப் பற்றி எழுதுவதை விட்டு விடுவார்கள்.

எனவே ஜென்டில்மேன்...மனதுக்குள் தேங்காய் தின்று கொண்டு..... தேங்காய் தின்னும் அடுத்தவனை பார்த்து கறுவுவதை விட்டு விட்டு..உண்மையில் தேங்காய் வாங்கித் தின்ன முயலுங்கள்....இதாவது தேவலை...இவர்களுக்கு பின்னூட்ட ஜால்ரா தட்டுபவர்களின் நிலைமை இன்னும் பரிதாபம்....தேங்காய் என்றால் என்ன என்று கூட தெரியாது...ஆனால் இவர்களுக்கு தேங்காய் பிடிக்காது.....கொடுமையடா சாமி????????

இந்த வலைப்பதிவரின் நேர்மைக்கும் மேதமைக்கும் சில உதாரணங்கள்...பின்னூட்டத்தில் சங்கீதம் பற்றி தமிழ் பற்றி உண்மை அக்கறையுடன் பேசிய எவருக்கும் இவர் பதில் சொல்லியிருக்க மாட்டார்....சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்வது (தமிழ்) பழமொழி....அதைத்தவிர மற்ற அனைவருக்கும் வளைத்து வளைத்து பதில் பின்னூட்டம் கொடுத்திருப்பார்....

தலைப்பை மாற்றி வைத்தெல்லாம் நேர்மை பறை சாற்ற முடியாது....குறிப்பிட்ட ஜாதியத்தை திட்டுகிறேன் என்று குறிப்பிட்ட ஜாதியை திட்டும் மொள்ளமாரித்தனத்தை இதனாலெல்லாம் மூடி மறைக்கமுடியாது....Keep the title of your post as you wish...and blame and curse as much as you can.....This is a Free world, after all.

கி.அ.அ.அனானி
*************************

*** 267 ***

Monday, December 04, 2006

பெரிய திருமொழிப் பாசுரங்கள் தொகுப்பு - PTM1

திருமங்கை மன்னன் - திருவல்லிக்கேணி
Photobucket - Video and Image Hosting

949@..
ஆவியே. அமுதே. எனநினைந்துருகி* அவரவர் பணைமுலைதுணையா*
பாவியேன் உணராது எத்தனைபகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்* சூழ்புனல் குடந்தையே தொழுது*
என் நாவினாலுய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2) 1.1.2


பாவியான யான், "ஆவியே, அமுதே" என்றெல்லாம் பிதற்றிய வண்ணம், சகலவிதமான சிற்றின்ப எண்ணங்களுடன் பெண்டிர் பின் அலைந்து, நாட்களை வீணாக்கி, அறிவின்மையால் என் வாழ்வைத் தொலைத்தேன் ! அப்படிப்பட்ட நான், தன் துணையோடு மட்டுமே சேரும் அன்னங்கள் வாழும் வற்றாத நீர்ச்சுனைகள் மிக்க திருக்குடந்தைப் பெருமானை அடைந்து, நாராயணா என்னும் திருநாமத்தைச் சொல்லி, உய்வு பெறும் வழியை, அவன் அருளால் கண்டு கொண்டேனே !

இப்பாசுரத்தில் "தூவிசேரன்னம் துணையொடும்புணரும்" என்று ஆழ்வார் பாடும்போது, பெருமாளை விட்டு என்றும் பிரியாமல் அவர் நெஞ்சில் குடியிருக்கும் பிராட்டியின் தன்மையைக் குறிப்பிடுவதாக பெரியோர் கூறுவர்.
********************************

953@..
எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்* எனக்கரசு என்னுடைவாணாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொளநெருக்கி* அவருயிர்செகுத்த எம்அண்ணல்*
வம்புலாம்சோலைமாமதிள்* தஞ்சை மாமணிக்கோயிலேவணங்கி*
நம்பிகாள். உய்யநான் கண்டு கொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2) 1.1.6


ஆழ்வார், பக்திப் பேருவகையில், பெருமான் மேல் கொண்ட பேரன்பில் அருளிய இப்பாசுரத்திற்கு, அந்த உணர்வுகள் நீர்த்துப் போகாத வண்ணம் பொருள் கூறுவது சிரமமே ! முயற்சிக்கிறேன் !

என்னுடைய பெருமான், என்னுடைய தந்தை, என் உறவினன், என்னை ஆள்பவன், என் உயிரானவன், எல்லா நேரங்களிலும், எல்லா வகையிலும் என்னை ரட்சிப்பவன், அம்பால் அசுரர்களை மாய்த்த என் கிலேச நாசன் என்றெல்லாம் சதா சர்வ காலமும் அவ்வண்ணலையே சிந்தையில் நிறுத்தியிருக்கும் கற்றறிந்த அடியார்களே ! அழகிய சோலைகளும், உயர்ந்த மதில்களும் சூழ்ந்த தஞ்சையின் மாமணிக்கோயிலில் எழுந்தருளியுள்ள அப்பெருமானைத் தொழுது, நாராயணா என்னும் திருநாமத்தைச் சொல்லி, உய்வு பெறும் வழியை, அவன் அருளால் கண்டு கொண்டேனே !
********************************

966@
ஓதியாயிரநாமங்கள் உணர்ந்தவர்க்கு* உறுதுயரடையாமல்*
ஏதமின்றி நின்றருளும் நம்பெருந்தகை* இருந்தநல் இமயத்து*
தாதுமல்கிய பிண்டிவிண்டு அலர்கின்ற* தழல்புரை எழில்நோக்கி*
பேதைவண்டுகள் எரியென வெருவரு* பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.9


பரமபுருஷனான எம்பெருமான், அவனது ஆயிரம் நாமங்களை பொருள் உணர்ந்து ஓதிய அடியார்களின் (முற்பிறவியின்)பாவங்களை களைந்து, துன்பம் எதுவும் அவரை நெருங்காதபடி ரட்சித்து, அவ்வடியார்கள் தன்னை வந்தடைவதற்கு அருள் செய்யும் பேரருளாளன். தாதுக்கள் நிறைந்த, எழில் மிக்க, சிவந்த அசோக மலர்களை, தீப்பந்துகள் என்று பேதமையில் எண்ணி அஞ்சி விலகும் வண்டுகள் வாழும், இமயத்துச் சாரலில் அமைந்த, திருப்பிரிதியின் நாயகனான அப்பிரானை வணங்கி, அவனைப் பற்றிடு என் நெஞ்சமே !
********************************

978@..
ஏனமுனாகி இருநிலமிடந்து* அன்றிணையடி இமையவர்வணங்க*
தானவனாகம் தரணியில்புரளத்* தடஞ்சிலைகுனித்த என்தலைவன்*
தேனமர்சோலைக் கற்பகம்பயந்த* தெய்வநன் நறுமலர்க்கொணர்ந்து*
வானவர்வணங்கும் கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.1


ஒரு சமயம், வராஹ அவதாரமெடுத்து கடலின் ஆழத்தில் சிறை வைக்கப்பட்ட பூவுலகை மீட்டுக் காத்தவனும், பின் ஸ்ரீராமனாக அவதரித்து, வானவர்கள் எல்லாம் வணங்கிப் போற்றும் வண்ணம், பலம் வாய்ந்த இராவணனையும் அசுர வம்சத்தையும் வில் கொண்டு மாய்த்தவனும் ஆவான் என் தலைவன். அந்த ஒப்பிலாத பெருமானே கங்கைக் கரையில் அமைந்த பத்ரிகாஷ்ரமத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்புண்ணியத் தலத்தில், தேவலோகச் சோலைகளில் மலர்ந்து நறுமணம் வீசும், பூஜைக்கு உகந்த, அழகிய கற்பக மலர்களை வானவர்கள் பறித்து வந்து, அவன் திருவடியில் வைத்து வணங்குகின்றனர் !
*****************************

984@
வெந்திறல்களிறும் வேலைவாயமுதும்* விண்ணொடு விண்ணவர்க்கரசும்*
இந்திரற்கருளி எமக்குமீந்தருளும்* எந்தையெம்மடிகள் எம்பெருமான்*
அந்தரத்தமரர் அடியிணைவணங்க* ஆயிரமுகத்தினாலருளி*
மந்தரத்திழிந்த கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.7


ஐராவதம் என்ற வெண்யானையையும், பாற்கடலை கடைந்தபோது உண்டான அமுதத்தையும், தேவலோகத்தையும், அதை அரசாளும் உரிமையையும் இந்திரனுக்கு அருளிய எம்பெருமானே, வேண்டுவனவற்றை எமக்கு உகந்து வழங்கும் என் அப்பன் ஆனவன் ! ஆயிரம் முகங்கள் கொண்டு அடியார்களுக்கும் வானவர்க்கும் அருள் வழங்கும் அக்கருணை வள்ளலே, இமயத்துச் சாரலில் உள்ள மந்திரமலையிலிருந்து பெருக்கெடுத்து ஓடி வரும் கங்கை நதிக் கரையில் அமைந்த பத்ரிகாஷ்ரமத்தில் எழுந்தருளியிருக்கிறான் !
*****************************
என்றென்றும் அன்புடன்
பாலா

*** 266 ***

Saturday, December 02, 2006

திவ்ய தேசம் 7 - திருக்கூடலூர்

Photobucket - Video and Image Hosting
இவ்வைணவ திவ்ய தேசம் திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில், தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. ஐயம்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து வடக்கே ஆறு கிமீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு, ஆடுதுறைப் பெருமாள் கோயில் மற்றும் சங்கம ஷேத்திரம் என்ற பெயர்களும் உண்டு.
...................மூலவர் தரிசனம்...................
Photobucket - Video and Image Hosting
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர், வையம் காத்த பெருமாள், உய்யவந்தார் மற்றும் ஜகத்ரட்சகன் என்று அழைக்கப்படுகிறார். கையில் செங்கோல் ஏந்தி காட்சி தரும் உத்சவருக்கும் அதே திருநாமம் தான்! மூலவ மூர்த்தி சுயம்புவாகத் தோன்றியவர் என்பது விசேஷம். தாயாரின் திருநாமங்கள் பத்மாசினி மற்றும் புஷ்பவல்லி ஆகும்.
....................உத்சவ மூர்த்தி.................
Photobucket - Video and Image Hosting
தீர்த்தமும், விமானமும் முறையே சக்ர தீர்த்தம், சுத்தஸத்வ விமானம் என்று அறியப்படுகின்றன. இத்தலத்தின் தலவிருட்சம் பலா ஆகும். கோயிலுக்குள் இருக்கும் பலா மரத்தில் சுயம்புவாக திருச்சங்கின் வடிவம் உருவாகியிருப்பதைக் காணலாம்.
Photobucket - Video and Image Hosting
ஒரு முறை, நந்தக முனியும், தேவர்களும் இங்கு ஒன்று கூடி ஹிரண்யாக்ஷனின் கொடுமையிலிருந்து பூவுலகைக் காக்குமாறு, மகாவிஷ்ணுவை வணங்கித் தொழுத காரணத்தால், இந்த புண்ணியத் தலம் திருக்கூடலூர் என்ற பெயர் பெற்றது என்று தல புராணம் கூறுகிறது. அவர்களின் வேண்டுதலே, எம்பெருமான் வராஹ அவதாரம் எடுக்கக் காரணமானது !
....................நரஸிம்ம மூர்த்தி .....................
Photobucket - Video and Image Hosting
நந்தக முனிவரின் மகளான உஷய், தலப்பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்ததாகவும், அவள் மேல் மையல் கொண்ட சோழ மன்னன் ஒருவன் அவளை மணந்ததாகவும், அவனது அமைச்சர்களின் பொய்யான தகவல்களை நம்பி அவளை விட்டுப் பிரிந்ததாகவும், பின் பெருமாளே அவர்கள் மீண்டும் கூடி வாழக் காரணமாக இருந்ததாகவும், அதனாலேயே இத்தலம் 'கூடலூர்' என்ற பெயர் பெற்றதாகவும் மற்றொரு பழங்கதை சொல்கிறது.

................மணவாள மாமுனிகள்..............
Photobucket - Video and Image Hosting
காவிரி, இவ்விடத்தில் திருமாலை வணங்கி, பாப விமோசனம் பெற்று, இழந்த பொலிவை திரும்ப அடைந்ததாக ஓர் ஐதீகம் உண்டு. அம்பரீசன், திருமங்கையாழ்வார், பிரம்மன், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் பெருமாளின் தரிசனம் பெற்று, அவரை வழிபட்ட புண்ணியத் தலமிது.
.......................சக்கரத்தாழ்வார்.................
Photobucket - Video and Image Hosting
இவ்வைணவ திருப்பதியை திருமங்கையாழ்வார், அவர் அருளிச் செய்த பெரிய திருமொழியில் உள்ள பத்து திருப்பாசுரங்களில் (1358-67) மங்களாசாசனம் செய்துள்ளார்.
**************************************
1358@..
தாம்* தம்பெருமையறியார்*
தூதுவேந்தர்க்காய* வேந்தர்ஊர்போல்*
காந்தள்விரல்* மென்கலை நன்மடவார்*
கூந்தல்கமழும்* கூடலூரே (5.2.1)
******************************
1359@
செறும்திண்* திமிலேறுடைய* பின்னை

பெறும்தண்கோலம்* பெற்றார்ஊர்ப்போல்*
நறுந்தன்தீம்* தேன்உண்டவண்டு*
குறிஞ்சிபாடும்* கூடலூரே (5.2.2)
********************************
1360@
பிள்ளைஉருவாய்த்* தயிருண்டு* அடியேன்

உள்ளம்புகுந்த * ஒருவரூர்போல்*
கள்ளநாரை* வயலுள்* கயல்மீன்

கொள்ளைகொள்ளும்* கூடலூரே (5.2.3)

என் அண்ணல், கோகுலத்து பாலகனாய், வாயிலிருந்து ஒழுக ஒழுக தயிரை உண்டு, என் உள்ளம் புகுந்த கள்வன் ! நாரைகள் வயல்களில் நின்றபடி காத்திருந்து, சூழ்ச்சியாக மீன்களை நீரிலிருந்து கவ்வியெடுக்கும் திருக்கூடலூரில் ஒப்பிலா அப்பிரானே எழுந்தருளியிருக்கிறான்.
********************************
1361@
கூற்றேருருவின்* குறளாய்* நிலம்நீர்

ஏற்றான்எந்தை* பெருமானூர்போல்*
சேற்றேருழுவர்* கோதைப் போதூண்*
கோல்தேன்முரலும்* கூடலூரே (5.2.4)


சிறிய வாமன வடிவினனாய் மாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, மூவுலகையும் இறைந்து பெற்றவன் என்னப்பன் ! குடியானவர் தங்கள் தலைப்பாகையில் சூடியுள்ள மலர்களின் தேனுண்டு, இனிமையாக ரீங்காரமிடும் வண்டுகள் நிறைந்த திருக்கூடலூரிலும் அப்பெருமானே தங்கி அருள் பாலிக்கிறான் !
********************************
1362@
தொண்டர்பரவச்* சுடர்சென்றணவ*
அண்டத்துஅமரும்* அடிகளூர்போல்*
வண்டலலையுள்* கெண்டைமிளிர*
கொண்டலதிரும்* கூடலூரே (5.2.5)


அண்டத்தை வியாபித்த பேருருவம் எடுத்த ஒளி மிக்க ஆதி பிரானை அடியார்கள் சூழ்ந்து போற்றி வணங்குகின்றனர் ! அவ்வண்ணலே, சூரிய ஒளி பட்டு மின்னும் மீன்கள், நீரின் மேற்பரப்பு அதிர,துள்ளி விளையாடும் சுனைகள் நிறைந்த திருக்கூடலூரில் கோயில் கொண்டுள்ளான்.
******************************
1363@
தக்கன்வேள்வி* தகர்த்ததலைவன்*
துக்கம் துடைத்த* துணைவரூர்போல்*
எக்கலிடு* ஞுண்மணல்மேல்* எங்கும்

கொக்கின் பழம்வீழ்* கூடலூரே (5.2.6)
**********************************
1364@
கருந்தண் கடலும்* மலையும் உலகும்*
அருந்தும் அடிகள்* அமரும்ஊர்போல்*
பெருந்தண் முல்லைப்* பிள்ளையோடி*
குருந்தம் தழுவும்* கூடலூரே (5.2.7)


கரிய, குளிர்ந்த கடல்களையும், மலைகளையும், உலகங்களையும், பிரளயத்தின் போது காக்க வேண்டி உண்ட பரந்தாமன், முல்லைக் கொடி வளர்ந்து பரவி, குருந்த மரங்களை தழுவி மறைத்து விடும் வனப்புடைய திருக்கூடலூரில், நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறான்.
*******************************
1365@
கலைவாழ்* பிணையோடு அணையும்* திருநீர்

மலைவாழ் எந்தை* மருவும்ஊர்போல்*
இலைதாழ் தெங்கின்* மேல்நின்று* இளநீர்க்

குலைதாழ்கிடங்கின்* கூடலூரே (5.2.8)
************************************
1366@
பெருகு காதல் அடியேன்* உள்ளம்-
உருகப் புகுந்த* ஒருவரூர்போல்*
அருகுகைதைமலர* கெண்டை

குருகென்றஞ்சும்* கூடலூரே (5.2.9)

என் ஐயனை அடைய வேண்டும் என்கிற பேரவா நாளுக்கு நாள் பெருக, என் உள்ளமானது சதா சர்வ காலமும் அவன் ஒருவனையே எண்ணி உருகுகிறது ! கரைக்கு அருகில் வளர்ந்திருக்கும் தாழை மலர்களை, தம்மைக் கொத்த வந்த நாரைகள் என்றெண்ணி அஞ்சும் மீன்கள் வாழும் தடாகங்கள் நிறைந்த திருக்கூடலூரில், கருணை மிக்க அவ்வண்ணல் எழுந்தருளி உள்ளான்.
********************************
1367@..
காவிப் பெருநீர் வண்ணன்* கண்ணன்

மேவித்திகழும்* கூடலூர்மேல்*
கோவைத் தமிழால்* கலியன் சொன்ன*
பாவைப் பாடப்* பாவம் போமே (5.2.10)
******************************************
...............ஊர்த்வ புண்ட்ரம்..................
Photobucket - Video and Image Hosting
ஒரு சமயம், கொள்ளிடம் நதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், இத்திருக்கோயில் மூழ்கி, விக்ரகங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், வெள்ளத்தில் மூழ்கிய விக்ரகங்கள் அருகில் உள்ள கீழ் வளத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த தீக்ஷிதர் ஒருவரின் கனவில் பார்த்த இடத்தில் தோண்டி எடுக்கப்பட்டதாகவும், பின்னர் அவ்வூரிலேயே 1741ல் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் தெரிய வருகிறது. தற்போது நாம் காணும் (பாபனாசத்துக்கு அருகே பெருமாள் கோயில் என்ற கிராமத்தில் உள்ள) கோயிலை, ராணி மங்கம்மாள் கட்டியதாக (அல்லது புதுப்பித்ததாக) தெரிய வருகிறது.
Photobucket - Video and Image Hosting
கோயிலில், வரதராஜப் பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. கோயிலுக்கு முன்னே உள்ள அழகான ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. கோயிலுக்கு உள்ளே இருக்கும் ஒரு மண்டபத்து தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நாலு கால பூஜை மரபு. வருடாந்திர பிரம்மோத்சவம் வைகாசித் திங்களில் விமரிசையாக நடைபெறுகிறது.

என்றென்றும் அன்புடன்
பாலா

புகைப்படங்கள் உதவி: ராமானுஜ தாஸர்கள் வலைத்தளம்

*** 265 ***

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails